பள்ளிக்கு செல்ல விரும்பாத மாணவி : கிணற்றில் குதித்து தற்கொலை!

 

பள்ளிக்கு செல்ல விரும்பாத மாணவி : கிணற்றில் குதித்து தற்கொலை!

நாமக்கல் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வசித்து வரும் துரைராஜ் என்பவரின் மகள் காவியா (17). இவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 8ம் தேதி 11 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட போது, காவியாவும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். வீடு திரும்பிய அவர், தன்னை வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியதோடு 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.

பள்ளிக்கு செல்ல விரும்பாத மாணவி : கிணற்றில் குதித்து தற்கொலை!

இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற காவியா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். காவியா பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் காவல் நிலையத்தில் புகாரளிக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நாமக்கல் ரயில் நிலையம் அருகே இருக்கும் கிணற்றில் ஒரு மாணவியின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற பெற்றோர், கிணற்றில் கிடந்த காவியாவின் சடலத்தை பார்த்து கதறி அழுத்துள்ளனர். இது காண்போரை கலங்கச் செய்துள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார், காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு செல்ல விரும்பாததால் தான் காவியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. பள்ளியில் காவியாவுக்கு ஏதேனும் பிரச்னையா? ஏன் அவர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராஜபாளையத்தில் நேற்று இரவு பள்ளிக்கு செல்ல விரும்பாத 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.