`2 நாள் பொறுத்துக்கொள்; செல்போன் வாங்கித் தருகிறோம்!’- ஆன்லைன் வகுப்பு தடைபட்டதால் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

 

`2 நாள் பொறுத்துக்கொள்; செல்போன் வாங்கித் தருகிறோம்!’- ஆன்லைன் வகுப்பு தடைபட்டதால் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் வேதனை அடைந்த பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பூத்தபேடு, ஏழுமலை தெருவைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சின்னையாவின் மனைவி சுவர்ணா. இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகன் கோபி, வளசரவாக்கம் மண்டல வார்டு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மகள் யாமினி ( 17) அருகில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆன்லைன் மூலம் கல்வி கற்க தனக்கு புதிய செல்போன் வாங்கித்தரும்படி யாமினி தனது பெற்றோர் மற்றும் அண்ணனிடமும் கேட்டுள்ளார்.

அவர்களும், இரண்டு நாட்களில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதுவரை தனது சித்தியின் செல்போனை ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்தி படித்து வந்தார் யாமினி. ஆனால், செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததால் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார் யாமினி. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு தனது பெற்றோர் செல்போன் வாங்கி தரவில்லையே என விரக்தி அடைந்த யாமினி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ராயலாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சக மாணவி இறந்த சம்பவம் கேள்விப்பட்டு, அவருடன் படித்த மாணவிகள் வந்து யாமினி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.