கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை!

 

கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. குறிப்பாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் கடன், மாதத்தவணை, லோன் என எதையும் செலுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த சூழலிலும் மக்களிடம் கடனை திரும்ப செலுத்துமாறு மத்திய, மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக பல தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் செயல்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை!

அதில், “மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் பொதுமக்களிடமிருந்து வாகன கடன், வீட்டுக்கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாத தவணைத் தொகையை முதலில் மே-31ம் வரையிலும், அதன் பிறகு ஆகஸ்ட்- 31 வரையிலும் என மொத்தம் ஆறு மாதங்களுக்கு வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய நிதியமைச்சரும் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் குற்றுயுரும், குலையுருமாக இருக்கும் மக்களின் கழுத்தை அறுக்கும் செயலை தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரின் உத்தரவையும் மீறி தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் மாத தவணைகளை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், தன்னிச்சையாக செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக பொதுமக்களின் வங்கி கணக்கில் மிச்சம் மீதி இருக்கும் சொற்ப தொகையை அபராதம் என்கிற பெயரில் சுரண்டுவதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் கொரோனா பேரிடர் காலமான தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லாத சூழலில் அவர்களை மாத தவணையை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறு கட்டாயப்படுத்தும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

கந்து வட்டிக்காரர்கள் போல மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டு, மக்களை கசக்கிப் பிழியும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தைகளாகி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.