மன அழுத்தம்… ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம்!

 

மன அழுத்தம்… ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம்!

மன அழுத்தம்… இன்றைக்கு வயது வித்தியாசமின்றி ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல; சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும்; தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

மன அழுத்தம்… ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம்!
குழப்ப மனநிலை:
மன அழுத்தம் என்றதும், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் / உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.

மன அழுத்தம்… ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம்!
புள்ளிவிவரம்:
மன அழுத்தம், கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான அளவில் அதிகரித்துள்ளது. 30 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) 2015–ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன. மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக அளவில், மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிர் இழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம்… ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகம்!
மனமுதிர்ச்சி:
வளர்ச்சியடையாத நாடுகளில், மன அழுத்தம் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் கட்டமைப்பு இருப்பதில்லை. அங்கு வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இருப்பதில்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால், சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி, வெளியில் உதவி பெறத் தயங்கி, அவர்கள் தங்கள் குறைபாட்டைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். இவற்றின் காரணமாகவே, வளர்ச்சியடையாத நாடுகளில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது.