வலுக்கும் தமிழர் – திராவிடர் கருத்து மோதல் : முற்றுப்பெற வைரமுத்து சொல்லும் யோசனை

 

வலுக்கும் தமிழர் – திராவிடர் கருத்து மோதல் : முற்றுப்பெற வைரமுத்து சொல்லும் யோசனை

தமிழ், தமிழர் என்பதை மாற்றி திராவிடர், திராவிடம் என்பதை உயர்த்திப்பிடிக்கிறது திமுக என்ற குற்றச்சாட்டினை தமிழ்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் முன்வைத்திருக்கின்றனர்.

வலுக்கும் தமிழர் – திராவிடர் கருத்து மோதல் : முற்றுப்பெற வைரமுத்து சொல்லும் யோசனை

சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து, எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இதற்கு, சங்க இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்குத் திராவிட இலக்கியம் எனத் தமிழக அரசு பெயர் சூட்ட முயல்வது தவறானது என்றார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன். அவர் மேலும், பிரச்சாரத்தில் தமிழர் என்ற சொல்லையே பயன்படுத்திய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் திராவிட என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்துகிறார். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று சொன்னார். இதையடுத்து, பெருமைமிக்கத் தொல் தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வசப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார் சீமான்.

வலுக்கும் தமிழர் – திராவிடர் கருத்து மோதல் : முற்றுப்பெற வைரமுத்து சொல்லும் யோசனை

திராவிடம் என்பது இனம் அல்ல அது ஒரு நிலப்பரப்பு அரசியல் அதிகாரத்திற்காக அம்பேத்கர் புகழ் பாடுபவர்கள் ஆரியமும் மாயை திராவிடமும் மாயைதான் என்று அம்பேத்கர் கூறியதை ஏற்க மறுப்பதேன் என்று கேள்வி எழுப்பிய தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சி செய்த கால்டுவெல் துவங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வரை செய்து இருப்பதாக சொல்லப்படும் திராவிட ஆய்வுகள் அனைத்தும் பொய்யும் புரட்டும் பிரிவினை கருத்துக்களும் நிறைந்தவையே என்கிறார். இதன் பின்னர், சங்க இலக்கிய நூல்களைச் சீர்பிரித்து வெளியிடுவதும், திராவிடக் களஞ்சியத் தொகுப்பும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, தனியானவை, தனித்துவமானவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார். ஆனாலும் சர்ச்சை தொடர்கிறது.

வலுக்கும் தமிழர் – திராவிடர் கருத்து மோதல் : முற்றுப்பெற வைரமுத்து சொல்லும் யோசனை

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. ஒன்று,தமிழன்; இன்னொன்று, திராவிடம். இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான்,அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர். 1881 ஆம் ஆண்டே மக்க ள்தொகைக்கணக் கெடுப்பில் ‘பூர்வத் தமிழர்’ என்று பதியச் சொன்னவர் பண்டிதர் அவர்கள். 1891 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘திராவிட மகாஜனசபை’ என்பதாகும். 1907 ஆம் ஆண்டு‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத்தொடங்கி, அதையே ‘தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர். ‘பூர்வீக சாதி பேத மற்ற திராவிடர்காள்’ என்று அழைத்தவர் அவர். அதனால்தான் தமிழன், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக அவர் ஏந்தினார் என்று குறிப்பிட்டேன். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது என்றார்.

தமிழர் – திராவிடர் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து,
தமிழ் என்பது
மொழிகுறிக்கும் சொல்லென்றும்,
திராவிடம் என்பது
இனக்குழு மற்றும் கலாசாரம்
குறிக்கும் சொல்லென்றும்
முன்னோர்கள் சொன்னார்கள்

இரண்டு சொற்களுக்குமான
கால இடைவெளியில்
படையெடுப்பு வரலாறு படிந்துள்ளது
என்று புரிந்து கொண்டால்
இந்தக் கருத்துக் கலகம்
முற்றுப்பெறும் என்று கருதலாம்

  • என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
    அதன்பின்னர் இன்னொரு டுவிட்டில்,
    தமிழ் – திராவிடம் குறித்த
    இன்றைய சுட்டுரைக்கு
    ஆக்கபூர்வமான எதிர்வினைகள்
    ஏராளம்; வரவேற்கிறேன்.
    மேலும் விளக்கம் விரும்புவோர்
    ‘தமிழாற்றுப்படை’ வாசிக்கலாம்.
    என்று தெரிவித்திருக்கிறார்.