`இது கொரோனா காலம்; எச்சரிக்கையுடன் இருங்கள்!’- திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

 

`இது கொரோனா காலம்; எச்சரிக்கையுடன் இருங்கள்!’- திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

“கொரோனாவுக்கு நாம் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை இழந்துள்ளோம். எனவே மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி மற்றும் எஸ்.காத்தவராயன் ஆகியோரது படங்களைத் திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசுகையில், “கொரோனா காலம் என்று காரணம் சொல்லி விட்டு, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் நாம் தவிர்த்து விடவில்லை. எந்தச் சூழலிலும் இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல், வெற்றி தோல்வி பாராமல், இவர்கள் எப்படி உழைத்தார்களோ; அத்தகைய தியாகிகளுக்கு நாமும் கொரோனா காலம் என்பதை எல்லாம் பாராமல் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். கே.பி.பி. சாமிக்கு 58 வயது தான். இன்னும் பல ஆண்டுகள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டியவரை இழந்துள்ளோம். எனவே அனைவருக்கும் நான் சொல்வது உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள். அதுதான் மிகமிக முக்கியம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கழகப் பணியும் ஆற்ற முடியும்; மக்கள் சேவையும் ஆற்றமுடியும். அதைவிட முக்கியமாக, உங்கள் குடும்பக் கடமைகள் இருக்கின்றன. இந்த மூன்றுக்காகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருங்கள்.

`இது கொரோனா காலம்; எச்சரிக்கையுடன் இருங்கள்!’- திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

அதுவும் இது கொரோனா காலம். கொரோனாவுக்கு நாம் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.அன்பழகனை இழந்துள்ளோம். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள், சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” ஆகிய மூன்றையும் வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா. அதேபோல், “உடல்நலம் – கழகப் பணி – மக்கள் சேவை” ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.