kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் தற்கொலை | சிபிசிஐடி வளையத்தில் சிக்குவாரா பச்சமுத்து?!

பச்சமுத்து பாரிவேந்தர்
பச்சமுத்து பாரிவேந்தர்
Loading...

சென்னையில் புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் சமீபமாக தொடர்ந்து தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. மாணவர்களின் தற்கொலை வழக்குகளை விசாரணை செய்வதற்காக சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையிலான குழுவினர், பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பொத்தேரியில் அமைந்திருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், வெளிமாநிலத்தில் இருந்தும், தமிழக்த்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள், கல்லூரி விடுதியிலும், கல்லூரிக்கு அருகில் இருக்கும் வெளி இடங்களிலும் தங்கிப் படித்து வருகின்றனர். 

srm

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சௌத்ரி என்ற மாணவர், கடந்த ஜூன் 27-ம் தேதி விடியற்காலை, விடுதியில் உள்ள 5-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முந்தைய நாளில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பி.டெக் இறுதியாண்டு படித்த மாணவி அனுப்பிரியா, கல்லூரி முடிந்த கடைசிநாளில் விடுதியில் உள்ள பத்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுபோல், கடந்த மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராகவ் என்ற மாணவரும் தற்கொலை செய்துகொண்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இப்படி தொடர்ந்து தற்கொலைச் செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியிலும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையேயும், எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

suicide

இதுபற்றி கல்லூரி வளாகம் அமையப் பெற்றிருக்கும் பொத்தேரி பகுதிவாசிகள் கூறுகையில், `` பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவாக சில காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்“ என்கின்றனர்.  காவல்துறையில் உள்ள சிலர், கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதால், இதுபோன்ற சம்பவங்கள் மறைக்கப்படுவதாகவும் மக்களிடையே பரவலான பேச்சு எழுந்தது. இது பற்றி மக்களிடையே பரவலாக பேச ஆரம்பித்ததும், இந்த வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி திரிபாதி.
இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட இடங்களைப் பார்வையிட்டனர். பல்கலைக்கழக பதிவாளர், பெற்றோர்கள், மாணவர்கள், காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

pachaimuthu

'சைக்கிள்' வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது இப்படித்தான்
சிபிசிஐடி விசாரணை குறித்துப் பேசும் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, ``நாடாளுமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார், பாரிவேந்தர். ஆனால், திடீரென தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, பெரம்பலூரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டார். பச்சமுத்து பெற்ற வெற்றி அ.தி.மு.க தரப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. பாரிவேந்தர் டெல்லியில் இருந்து லாபி செய்வது அ.தி.மு.க-விற்கு பிடிக்கவில்லை. பொதுவாக, சில வழக்குகளில் நீதிமன்றம் தலையிட்டு வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யும். ஆனால், குறிப்பிட்ட இந்த வழக்கை டிஜிபி-யே சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்ததில் இருந்தே இந்த வழக்கில் அதிகளவில் அரசியல் நெருக்கடி இருப்பதைப் புரிந்துக் கொள்ளலாம்” என்றனர்.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் விதமாக கல்லூரியில் சில மோட்டிவேஷன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. சட்டப்படியாகவே அனைத்தையும் சந்திப்போம்“ என்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.