இந்திய வீரர்கள் பன்றி, மாட்டிறைச்சி சாப்பிட தடை - பிசிசிஐ அறிவிப்பால் வெடித்த சர்ச்சை!

 
இந்திய வீரர்கள்

டி20 உலகக்கோப்பையில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியது. 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பின் முதல் முறையாக லீக் சுற்றில் இந்தியா வெளியேறியது. இதற்கு இந்திய வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போனதே காரணமாகக் கூறப்பட்டது. Bench Strength எனப்படும் இந்திய அணியின் பலம் உலகின் எந்தவொரு அணியையும் தோற்கடிக்கக் கூடிய வகையில் இருந்தது. ஆனால் பிசிசிஐ வீரர்களுக்கு ரெஸ்ட் விடாமல் தொடந்து ஆறு மாத காலமாக விளையாட வைத்திருக்கிறது.

இந்திய வீரர்கள்

இதுவே லீக் சுற்றில் வெளியேற முழுமுதற் காரணம். இப்போது பயோ-பபுள் வேறு இருப்பதால் வீரர்கள் மனதளவில் சோர்வாகிவிட்டனர். தோல்விக்கு வீரர்களைக் காட்டிலும் பிசிசிஐ தான் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனை சரிக்கட்டும் விதமாக வீரர்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய உணவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய டயட் பிளான் தான் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. புதிய டயட்டில் பன்றி மற்றும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

Halal

இந்த இரண்டின் இறைச்சிகள் எந்தவிதத்தில் சமைத்தாலும் வீரர்கள் சாப்பிடக் கூடாது. இருப்பினும் மற்ற விலங்குகள், பறவைகளின் இறைச்சியைச் சாப்பிடலாம். ஆனால் அதற்கும் ஒரு கன்டிஷன் உள்ளது. அந்த இறைச்சி ஹலால் முறையில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். ஹலால் முறை என்பது இஸ்லாமியர்களால் பின்பற்றப்படுவது. அந்த வகையில் விலங்கின் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி நரம்புகள் வெட்டப்படும். இதனால் வலி அதிகமில்லாமல் விலங்கு இறக்கும். 


இதோடு சேர்த்து ரத்தக்குழாயும் மூச்சுக்குழாயும் ஒரே நேரம் வெட்டப்படுவதால், ரத்தம் அனைத்தும் வெளியேறிவிடும். ரத்தம் வெளியேறிவிட்டால் கிருமிகளால் இறைச்சி கெடாமல் இருக்கும். ஆனால் ஜாத்கா என்ற இந்து முறையில் ஒரே வெட்டில் விலங்குகள் துடிதுடித்து இறந்துவிடும். ஆகவே ஹலால் முறையை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இதுதான் கூடுதல் சர்ச்சைக்குக் காரணம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஏன் இஸ்லாமிய ஹலால் உணவுகள் வழங்க வேண்டும் என பிசிசிஐயை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.