ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு ? - ரசிகர்கள் அதிர்ச்சி

 
ambati rayudu

நடப்பு சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ள நிலையில், இது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பிறந்தவர் அம்பத்தி ராயுடு. சிறு வயது முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்பத்தி ராயுடு கடந்த 2004ம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அவர் இந்திய அணியை அரையிறுதி வரை இந்திய அணியை கூட்டிச் சென்றார். இதேபோல் அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக முதல் முதலில் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாவே அணிக்கு எதிராக முதல் முதலில் களமிறங்கினார். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்ததை அடுத்து அவர் 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 1694 ரன்கள் சேர்த்துள்ளார். இதேபோல் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 42 ரன்கள் எடுத்துள்ளார். 

rayudu

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார் அம்பத்தி ராயுடு. இந்நிலையில், நடப்பு சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 4,187 ரன்கள் குவித்துள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அம்பத்தி ராயுடு, இது எனது கடைசி ஐபிஎல் ஆகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல விரும்புகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவு வைரலான நிலையில் சிறிது நேரத்தில் அவர் அந்த டுவிட்டை நீக்கியுள்ள நிலையில், ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.