சூர்யகுமார் யாதவிற்கு பயமே கிடையாது... தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார் - ரோகித் புகழாரம்

 
rohit

சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது எனவும் தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார் எனவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆசியக் கோப்பை தொடரின் 4வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆட முயன்ற ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த ஆட்டமிழந்தார். மறுபுறம் தடுமாற்றத்துடன் ஆடி வந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். மறுபுறம் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் சூறாவளி போல ஆடி 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68 ரன்கள் குறித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுபுறம் விராட் கோலி 59 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.கலக்கலாக ஆடிய இந்த ஜோடி 42 பந்துகளில் 98 ரன்களை குவித்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது.

suryakumar yadav

இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் பாபர் ஹெயாட் 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 26 பந்துகளில் 68 ரன்கள் சேர்ந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. 

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- தொடக்கத்திலேயே எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்தோம். பந்து வீச்சு பொறுப்பான முறையில் இருந்தது. பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவரை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்கள். இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்
.