சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

 

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் கொலையில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை திடீர் மரணம்!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.