ரஜினிக்கு ஓபனிங் சாங் கொடுத்துவிட்டு தன் இசை பயணத்துக்கு எண்ட் கார்டு போட்ட எஸ்.பி.பி

 

ரஜினிக்கு ஓபனிங் சாங் கொடுத்துவிட்டு தன் இசை பயணத்துக்கு எண்ட் கார்டு போட்ட எஸ்.பி.பி

கொரோனா பிடியில் சிக்கித் தவித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் அண்ணாத்தே படத்தில் ரஜினிக்காக பாடிய ஓபனிங் சாங்கே அவரது கடைசி பாடல்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு மாஸ் ஓப்பனிங் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் பல காலமாக பாடி வருகிறார். ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு தனது குரலை மெருகேற்றிக்கொண்டு பாடி அசத்தும் அசாத்திய திறமை பெற்றவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அப்படி பாடப்படும் பாடல்கள் ரசிகர்கள் மனதை சட்டென ஈர்த்துவிடும். அந்தவகையில் வந்தேன் டா பால்க்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, அதான் டா இதான் டா அருணாச்சலம் நான் தான் டா, நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, தேவுடா தேவுடா, மரண மாஸ், சும்மா கிழி என ரஜினி- எஸ்பிபியின் காம்போவில் வெளியான அத்தனை ஓப்பனிங் பாடல்களும் மாஸ் தான்.

16 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் இசை மேதை எஸ்பிபி தனது வாழ்நாளின் இறுதி பாடலை பாடியதும் ரஜினிக்காக தான். ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஊரடங்கிற்கு முன்பு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் எஸ்.பி.பி. – ரஜினி கூட்டணி இணைந்ததால் இதை ரசிகர்கள் கொண்டாடினார் . ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. காரணம் படம் வெளியாவதற்கு முன்பே எஸ்.பி.பி அனைவரைவிட்டும் பிரிந்து சென்றார்.