‘அந்த பெண்ணை’ சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி

 

‘அந்த பெண்ணை’ சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், ‘எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா? தங்கமணி, வேலுமணி எல்லா மணியும்; எல்லாமே money moneyன்னு இருக்கு.. இப்படி பல அமைச்சர்கள் குறித்து ஊழல் புகாரை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் என்று பேசினார். அப்போது கேள்வி கேட்க அனுமதி இல்லாத பெண் ஒருவர் மைக்கை வாங்கி ஸ்டாலினிடம் திடீரென கேள்வி கேட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் ஸ்டாலின், நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்; தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறினார். தொடர்ந்து அப்பெண்ணை கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார். இதனிடையே கேள்வி கேட்ட அந்த பெண் அதிமுகவை சேர்ந்த பூங்கொடி என்பது தெரியவந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பில் காயம் ஏற்பட்டதையடுத்து பூங்கொடி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணை நான் அனுப்பவில்லை என அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறி வருகிறார்.

‘அந்த பெண்ணை’ சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த பூங்கொடியை அமைச்சர் எஸ்பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிராம சபை கூட்டத்தில் நடந்த தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் அங்கே ஏன் சென்றீர்கள் என கேட்டேன். தேவராயபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் மக்கள் கிராம கூட்டத்தில் கேள்வி கேட்டதாக கூறினார். இதனால் அப்பெண் உள்பட 5 பேர் திமுகவினரால் தாக்கப்படுள்ளனர். திமுகவினர் கேள்விக்கு முறையாக பதில் அளித்திருக்கலாம். பெண்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது.

இதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். இந்த செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனுவை பெற்றுக்கொண்டு, பொய்யான வாக்குறுதிகளை சொல்லி திமுக மக்களை ஏமாற்றுகிறது. திமுக எப்போதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இதுபோன்ற செயல்களுக்கு மக்கள் மேடையில் பதில் சொல்லி ஆக வேண்டும். இதுபோன்ற மோசமான செயல் கோவை மண்ணில் நடைபெற்றதில்லை. ஆட்சிக்கு வர முடியாத வன்மத்தை திமுக மக்கள் மீது காட்டுகிறது. ஊழல் குறித்து பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை” எனக் கூறினார்.