இதய அடைப்பு எதிரொலி: கங்குலியின் எண்ணெய் விளம்பரம் அதிரடி நீக்கம்… காரணம் என்ன?

 

இதய அடைப்பு எதிரொலி: கங்குலியின் எண்ணெய் விளம்பரம் அதிரடி நீக்கம்… காரணம் என்ன?

பிசிசிஐ தலைவர் சில தினங்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பிருப்பதாகக் கூறினர். மேலும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையளித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சூழலில் கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பார்ச்சூன் சமையல் எண்ணெய் நிறுவனம் கூறியுள்ளது. அந்த எண்ணெய் விளம்பரத்தில் கங்குலி இதய பாதுகாப்பு குறித்துப் பேசி நடித்திருப்பார். அதில், “பார்ச்சூன் எண்ணெயைத் தான் பயன்படுத்தி ஆரோக்கியமாக இருப்பது போல நீங்களும் அந்த எண்ணெயை உபயோகித்து ஆரோக்கியமாக இருங்கள்” என்று அவர் கூறியிருப்பார்.

இதய அடைப்பு எதிரொலி: கங்குலியின் எண்ணெய் விளம்பரம் அதிரடி நீக்கம்… காரணம் என்ன?

இந்த நிலையில் தான் கங்குலியின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் நடித்த விளம்பரத்தைக் கொண்டே இதய ஆரோக்கியத்திற்காகப் பார்ச்சூன் எண்ணெயைப் பயன்படுத்துங்கள் என்று விளம்பரம் செய்ய முடியாது என்பதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மட்டுமல்லாமல் யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலிருந்தும் விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிறுவனத்தின் தரப்பில், “எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான சமையல் எண்ணெய் உலகிலேயே மிகச் சிறந்த மற்றும் ஆரோக்கியமான எண்ணெய். அதிலிருக்கும் காமா ஒரைசோனல் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

இதய நோய்களுக்கு மரபியல், பரம்பரை என பல்வேறு காரணிகள் இருக்கலாம். ஆகவே அதை எங்கள் எண்ணெய் எதிர்க்கும் என்று நாங்கள் கூறவில்லை. ஏனெனில் எங்களின் எண்ணெய் மருந்தல்ல; அது ஆரோக்கியமான சமையல் எண்ணெய்.

இதய அடைப்பு எதிரொலி: கங்குலியின் எண்ணெய் விளம்பரம் அதிரடி நீக்கம்… காரணம் என்ன?

எங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கங்குலி செயல்பட்டுவருகிறார். அவருக்குத் திடீரென்று இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால் எங்கள் விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம். அவர் மீண்டு வந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கங்குலியுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ச்சூன் நிறுவனம் அதானி குழுமத்தைச் சேர்ந்தது. எண்ணெய் மார்க்கெட் சந்தையில் இந்நிறுவனம் 35 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில், “தாதா (கங்குலி) விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். எப்போதும் நன்கு சோதிக்கப்பட்ட நல்ல பொருட்களுக்கு விளம்பரம் கொடுங்கள். கவனமாக இருங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். (ஓ இதுதான் எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா?)