2024 நாடாளுமன்ற தேர்தல் வரை சோனியா காந்திதான்… ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லை..

 

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை சோனியா காந்திதான்… ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லை..

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார். அதேசமயம் அவருக்கு உதவுவதற்காக சச்சின் பைலட் உள்பட 4 பேர் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதேசமயம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்கும் முயற்சிகளை சில தலைவர்கள் மேற்கொண்டனர். ஆனால் ராகுல் காந்தி மறுத்து விட்டார். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய, எழுச்சிமிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் முழு நேர தலைமை தேவை என்று மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை சோனியா காந்திதான்… ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லை..
ராகுல் காந்தி

ஆனால், கொரோனா தொற்று, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் அது தாமதமானது. இந்த சூழ்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியின் பிரபலமான இளம் தலைவர்களை முக்கிய பதவிகளில் நியமனம் செய்யப்பட உள்ளதாக செய்தி கசிந்துள்ளது. முக்கிய விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு உதவுவதற்காக 4 செயல் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை சோனியா காந்திதான்… ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லை..
சச்சின் பைலட்

குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், குமாரி சைலஜா, முகுல் வாஸ்னிக் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பெயர்கள் செயல் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ராகுல் காந்தி கட்சியின் ஒட்டு மொத்த அமைப்பையும் மேற்பார்வை செய்வார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்திக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படுமா என்பது சரியாக தெரியவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.