ஊரடங்கால் வேலையை இழந்தார்… வருமானமும் இல்லை… கள்ளச்சாவி போட்டு பெற்றோர் வீட்டில் கொள்ளையடித்த மகன்!

 

ஊரடங்கால் வேலையை இழந்தார்… வருமானமும் இல்லை… கள்ளச்சாவி போட்டு பெற்றோர் வீட்டில் கொள்ளையடித்த மகன்!

ஊரடங்கால் வேலையை இழந்த மகன், தனது பெற்றோர் வீட்டிலேயே நகைகளை கொள்ளையடித்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தயவு தாட்சண்யமின்றி வேலையைவிட்டு நீக்கியது. இதனால், பலர் வேலை இழந்தும் வருமானத்தை இழந்தும் தவித்து வருகின்றனர். வேலையின்றி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் வறுமையில் தவித்து வருகின்றனர். வேலை இழந்த பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன. இந்த நிலையில், வேலை பறிபோன நிலையில், பெற்றோர் வீட்டிலேயே கொள்ளையடித்துள்ளார் மகன். இந்த வேதனையான சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் வசித்து வரும் ரமேஷ்குமாரும், இவரது மனைவியும் கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரம் கழித்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோ திறக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த 12 பவுன் நகைகள் காணாமல் போய் இருந்தது. இது குறித்து அவர்கள், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்களது மகன் தமிழ்செல்வன் நகையை திருடியது தெரியவந்தது. இவர், பெற்றோர் வசிக்கும் இடத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இந்த மணவெளி திரெளபதி அம்மன் கோயில் வீதியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார் தமிழ்செல்வன். செலவுக்கும் அவரிடம் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், பெற்றோர் வெளியே சென்றதை அறிந்து கள்ளச்சாவி போட்டு வீட்டின் பூட்டை திறந்து நகைகளை திருடியுள்ளார். அவரிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்த காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.

வருமானமின்றி தவித்த மகன், பெற்றோர் வீட்டில் நகைகளை திருடிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.