• April
    05
    Sunday

Main Area

Main



சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை-நீதிமன்றம் அதிரடி

sohrabuddin
sohrabuddin

மும்பை: சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும், முக்கிய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார் எனவும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், பேருந்தில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தி பின்னர் சுட்டுக் கொன்றதாகவும், இது போலி என்கவுன்ட்டர் எனவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான துளசி பிரஜாபதி 2006-ஆம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

amitshah

இந்த இரு கொலை வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்தது என சிபிஐ குற்றம்சாட்டியது. இவ்வழக்கு 2012-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு  மாற்றப்பட்டது. அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனிடையே, வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்தார். அவர் மரணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

loya

அதேசமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றவாளி இல்லை எனக் கூறி மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரை விடுவித்தது.

இந்நிலையில், சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 காவல் அதிகாரிகள் உள்பட 22 பேரையும் விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றம்புரிந்ததற்கான போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.