சமூக நீதி நாள் – கவிஞர் வைரமுத்து புகழாரம்!

 

சமூக நீதி நாள் – கவிஞர் வைரமுத்து புகழாரம்!

பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப் படுகின்ற முதல்வரின் அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு ,சமூகநீதி உள்ளிட்ட மாபெரும் கொள்கைகளை தனது இறுதி மூச்சு இருக்கும் வரை சுமந்து சென்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இனி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று பெரியாரின் பிறந்த நாள் தமிழகம் எங்கும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களை சரிசமமாக கருதுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்படவுள்ளது.

சமூக நீதி நாள் – கவிஞர் வைரமுத்து புகழாரம்!

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ,

“சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது

சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்

அவர் பிறந்த நாளைச்
‘சமூக நீதி நாள்’ என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்

வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழருக்கு பகுத்தறிவு சிந்தனையை புகட்டி, சுயமாக சிந்தித்து சுயமரியாதையுடன் வாழ்ந்திட வழிகாட்டிய வெண்தாடி வேந்தர், உழவருக்கு பயிரை போல, தமிழருக்கு உயிரான தந்தை பெரியாரின் பிறந்த நாளை, மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணைப்படி சமூகநீதி நாளாக கொண்டாடுவோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.