ஈரோட்டில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

ஈரோட்டில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!


ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதால், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல், +2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 395 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 900 மாணவ – மாணவிகள் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளில், சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர்.

ஈரோட்டில் இதுவரை 28 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் முதல் முதலாக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவனுடன் படித்த மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மறுநாள் கோபியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மாணவ-மாணவிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதைப்போல், ஒரு சில ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இவ்வாறாக, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ – மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்போல், 16 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், 28 மாணவ-மாணவிகளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.