சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

 

சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா எனும் சாமியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை அடுத்து கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளியில், அதே வளாகத்தில் விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை சிவசங்கர் பாபா எனும் சாமியார் நடத்தி வருகிறார். பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இதில், சுஷில் ஹரி இன்டர் நேஷ்னல் பள்ளி மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என அழைத்துக் கொள்ளும் சிவசங்கர்பாபா, தனது உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது நூற்றுக்கணக்கான புகார்கள் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுக்கப்பட்டது. ஆணையத்தின் முன்பு ஆஜராகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்த போது தான், சிவசங்கர் பாபா தலைமறைவானது தெரியவந்தது. ஆன்மீக சுற்றுலாவிற்கு உத்தரகாண்ட் சென்ற சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீது மூன்று மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதில், இருவர் முன்னாள் மாணவிகள் என்றும், ஒருவர் தற்போது படித்து வரும் மாணவி என்றும் கூறப்படுகிறது.

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலரை ஊழியர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கடவுளின் அவதாரம் சிவசங்கர் பாபாவிற்கு பணிவிடை செய்ய வேண்டும் என அழைத்துச் சென்று, பின்னர் சிவசங்கர் பாபா பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மாணவிகள் சிலருக்கு கட்டாயப்படுத்தி மது ஊற்றி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிவசங்கர் பாபா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் என 5 பிரிவுகளின் கீழ் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், பள்ளி வளாகத்தில் தங்கி சிவசங்கர் பாபாவிற்கு பணிவிடை செய்யும் பெண் ஊழியர்கள் சிலரும் சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டலுக்கு உடந்தை என்பதாலும், இந்த சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது என்பதாலும் இதில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.