சருமம் பொலிவாக இருக்க ஈஸி வழிகள்

 

சருமம் பொலிவாக இருக்க ஈஸி வழிகள்

முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பது தான் பெண்களைப் பொறுத்தவரையில் பிரதான விஷயம். மென்மையான, பொலிவான, பட்டுபோன்ற சருமம் வேண்டும் என்பது பலரின் விருப்பம். இருப்பினும் அதீத வேலைப்பளு, தவறான உணவு பழக்க வழக்கம், போதுமான தூக்கமின்மை, சுற்றுசூழல் மாசு போன்ற காரணங்களால் சருமம் பொலிவிழந்து, மிக விரைவாக சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சருமம் பொலிவாக இருக்க ஈஸி வழிகள்

சருமத்தைக் காக்க, ஆரோக்கியத்தை அளிக்க மார்க்கெட்டில் கிடைக்கும் கண்டகண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு பதில் வீட்டிலேயே எளிய தீர்வு உள்ளது.

மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல், சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட், ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மூலக்கூறுகள் உள்ளன. இவை சருமத்தை சுத்தப்படுத்தி சருமத்துக்கு புத்துணர்வைத் தருகிறது.

ஒரு கப் பயத்தம்பரும்பு மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் விட்டு, அதனுடன் பால் அல்லது தண்ணீர், ஒரு சில துளிகள் ரோஸ் வாட்டர் விட்டு குழைத்து முகத்தில் பூசி ஊற வைக்க வேண்டும். இந்த மிக்ஸ் நன்கு உலரும் வரை பொறுமையாக இருந்து, பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

தேன் மிகச்சிறந்த மாஸ்ச்சரைஸராக செயல்படும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இதனால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும்.

தேனை மட்டும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். முகத்தில் தேனை ஊற விடுவதால் சருமம் அதில் உள்ள மூலக்கூறுகளைக் கிரகித்துக்கொள்ளும். சருமம் ஆரோக்கியம் அடையும்.

ஆலிவ் எண்ணெய்யில் சருமத்தை காக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் உள்ளது. இது சருமம் மிக விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆலிவ் எண்ணெய் சரி செய்யும். சருமத்துக்கு பளபளப்பையும் மென்மையையும் அளிக்கும்.

தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய்யை முகம், கழுத்து, கையில் தடவிவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும். மேல் நோக்கியவாறு இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவு எண்ணெய்ப் பிசுக்கோடு தூங்க விருப்பம் இல்லாதவர்கள் ஒரு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக்கொள்ளலாம்.

ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடுவது, ஆரஞ்சு சாற்றை முகத்தில் தடவுவது சருமத்தைப் பொலிவாக்கும்.