கொசுவின் மரபணுவில் சிறிய மாற்றம்… மலேரியா பரவலைத் தடுக்கும் என நம்பிக்கை!

 

கொசுவின் மரபணுவில் சிறிய மாற்றம்… மலேரியா பரவலைத் தடுக்கும் என நம்பிக்கை!

மலேரியா ஒட்டுண்ணியை பரப்பும் கொசுவின் மரபணுவில் சிறிய மாற்றத்தை செய்து அதன் வயிற்றில் ஒட்டுண்ணி வளர்வதை ஆய்வாளர்கள் தடுத்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மலேரியா நோய்த் தொற்று பரவும் வாய்ப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்தலாம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெப்பமண்டல நாடுகளில் மலேரியா காய்ச்சல் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் கல்லீரலில் தங்கி பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கொசுக்களை அழிக்க பல முயற்சிகள் செய்தும், அனைத்திலிருந்தும் அவை வீரியம் பெற்று தொடர்ந்து மலேரியாவை பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

கொசுவின் மரபணுவில் சிறிய மாற்றம்… மலேரியா பரவலைத் தடுக்கும் என நம்பிக்கை!

இந்த நிலையில் மரபியல் மாற்றம் மலேரியா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் மலேரியாவை பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, அடுத்ததாக மலேரியாவை பரப்பும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்ற ஒட்டுண்ணியை இந்த கொசுக்கள் கடத்துவதைத் தடுப்பது என ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றாலும் கூட இந்த கொசுக்களை வெளியிடுவதால் என்ன மாதிரியான பாதிப்புகள் வரலாம் என்று சாத்தியங்களை ஆய்வு செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியின் இணை ஆராய்ச்சியாளர் ஆஸ்ட்ரிட் ஹோர்மன் கூறுகையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்த கொசுக்களை வெளியிடுவதால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை ஆய்வு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி கொசுக்களின் குடலில்தான் வளர்ச்சி பெறுகின்றன. எனவே, குடலில் வளர்ச்சி அடைவதைத் தடுக்க மரபணுவில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மாறுபாடு செய்யப்பட்ட கொசுக்களின் வயிற்றில் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் ஒட்டுண்ணி வளர்ச்சி அடைவது இல்லை.

அனோபிலஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வேகத்தைக் குறைக்க மற்றொரு மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் உற்பத்தியாகும்போது எதிர்காலத்தில் மலேரியா காய்ச்சல் வருவதைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.