கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்! – பிரான்ஸ் ஆய்வில் உறுதி

 

கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்! – பிரான்ஸ் ஆய்வில் உறுதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு கண்களிலும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என்று பிரான்ஸ் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்று மட்டுமே நம்பியிருந்தோம். ஆனால் கொரோனா நுரையீரல் மட்டுமின்றி இதயம், கல்லீரல், பெருங்குடல் என பல உள் உறுப்புக்களையும் பாதித்திருப்பது ஒவ்வொரு ஆய்வில் தெரியவந்து கொண்டே இருக்கிறது.

கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்! – பிரான்ஸ் ஆய்வில் உறுதி

இந்த நிலையில் பிரான்ஸ் சொசைட்டி ஆஃப் நியூரோரேடியாலஜி (SFNR) தீவிர கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலும் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் பல இடங்களில் பாதிப்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக பார்வை திறனுக்கு காரணமான பகுதியில், கண்ணுடன் தொடர்புடைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

129 நோயாளிகளை எம்.ஆர்.ஐ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ஒன்பது சதவிகிதம் பேருக்கு கண்களில் இயல்புக்கு மீறிய திசுக்கள் வளர்ச்சி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். முடிச்சு போன்று அமைப்பு அதிக அளவில் கண் உருளையின் பின்புறத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேரில் 8 பேர் தீவிர கொரோனா பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாரீஸ் பல்கலைக் கழக இணை பேராசிரியர் அகஸ்டின் லெக்லேர் கூறுகையில், “பிரான்சில் மிகத் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.ஆர்.ஐ சோதனை செய்ததில் கண்ணின் பின்புறத்தில் முடிச்சுக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். முதன்முறையாக நாங்கள்தான் இந்த மாறுதலைக் கண்டறிந்துள்ளோம்.

நாங்கள் நடத்திய ஆய்வில் ஒன்பது பேருக்கு இப்படி இருப்பது தெரியவந்தது. அவர்களில் 8 பேருக்கு இரண்டு கண்களிலும் முடிச்சு போன்ற அமைப்பு இருந்தது. இதுதான் கண்ணின் பார்வைத் திறனை அளிக்கும் மையம். எனவே, கொரோனா தீவிர பாதிப்பு இருந்தவர்கள் எல்லாம் தங்கள் கண்களையும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது” என்றார்.

எதனால் இந்த முடிச்சுக்கள் வந்தது. இப்படி வருவதால் என்ன மாதிரியான பாதிப்பு வரும் என்பது பற்றி ஆய்வுகள் இல்லை. அதே நேரத்தில் இந்த முடிச்சுக்கள் வருவதற்கு கொரோனாத் தொற்றுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகின்றனர். விரைவில் இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.