ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் அழகா… ஆபத்தா?

 

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் அழகா… ஆபத்தா?

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் அழகா… ஆபத்தா?

முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப் படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்னை ஏற்படலாம்.

முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.

வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.

ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.