ஒருபுறம் லத்தி… மறுபுறம் மலர் – டெல்லி விவசாயிகள் பேரணியில் நடந்தது என்ன?

 

ஒருபுறம் லத்தி… மறுபுறம் மலர் – டெல்லி விவசாயிகள் பேரணியில் நடந்தது என்ன?

டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு என அராஜகமாக நடந்துகொண்டாலும், மறுபுறம் டெல்லி மக்கள் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மக்களின் முழு ஆதரவும் விவசாயிகள் பக்கமே இருந்தது. இதனால் தான் மத்திய அரசால் டெல்லி போலீஸின் மூலம் அவர்களின் போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை.

ஒருபுறம் லத்தி… மறுபுறம் மலர் – டெல்லி விவசாயிகள் பேரணியில் நடந்தது என்ன?

இந்நிலையில், குடியரசு தினமான இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். முதலில் அனுமதி மறுத்த டெல்லி போலீஸ் கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தது. பேரணிக்கு மூன்று வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தன.

டிக்ரி, சிங்கு, காஜிப்பூர் ஆகிய பகுதிகளில் புறப்படும் பேரணி 30 கிமீ தூரம் பயணித்து மீண்டும் அதே வழியாக எல்லை பகுதிக்கு அடைய வேண்டும். இதுதான் பேரணிக்காக வகுக்கப்பட்ட திட்டம். செங்கோட்டையில் குடியரசு தின விழா நடந்துமுடிந்த பின் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலிருந்து விவசாயிகள் பேரணியை த் தொடர்ந்தனர்.

அப்போது வழி நெடுகிலும் மக்கள் அவர்களுக்கு பேராதரவை வழங்கினர். அவர்கள் கோஷம் போட்டு, மலர்களைத் தூவி விவசாயிகளை உற்சாகப்படுத்தி பேரணியை வழியனுப்பி வைத்தனர். இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடைபெற்ற சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர்.

விவசாயிகளில் சிலர் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல், மாறாக மத்திய டெல்லி பகுதியை நோக்கி பயணித்ததாகக் கூறி டெல்லி போலீஸ் அவர்கள் மீது தடியடி நடத்தியது. அதையும் மீறி விவசாயிகள் முன்னேற முயன்றதால் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொடூரமான முறையில் காவல் துறையினர் விவசாயிகளை தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகளை பார்ப்பதற்கே பயங்கரமானதாக இருக்கிறது.

ஒருபுறம் அரசியலமைப்பை கொண்டாடும் வகையில் குடியரசு தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், அரசியலமைப்புச் சட்டம் கூறும் மாற்று கருத்து உரிமையுடன் போராடும் விவசாயிகளை அரசு தடியடி நடத்தி அடக்குவது கண்டனத்திற்குரியது என அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்துவருகின்றனர்.