விமானத்தை வாடகை எடுத்து 120 ஊழியர்களை கேரளாவுக்கு அழைத்து வந்த ஷார்ஜா தொழிலதிபர்

 

விமானத்தை வாடகை எடுத்து 120 ஊழியர்களை கேரளாவுக்கு அழைத்து வந்த ஷார்ஜா தொழிலதிபர்

ஆலப்புழா: ஷார்ஜா தொழிலதிபர் ஒருவர் விமானத்தை வாடகை எடுத்து 120 ஊழியர்களை கேரளாவுக்கு அழைத்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்ட எலைட் குழுமத்தின் உரிமையாளர் ஆர்.ஹரிகுமார் என்பவர் ஏர் அரேபியா ஜி9427 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். அதில் தனது 120 ஊழியர்களை ஏற்றிக் கொண்டார். இதையடுத்து ஷார்ஜாவிலிருந்து அந்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5:30 மணி) அந்த விமானம் புறப்பட்டது. ஹரிகுமார் ஆலப்புழாவில் உள்ள அமபல்பூஜாவை சேர்ந்தவர்.

ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பிபிஇ கிட், முகக் கவசம், கையுறைகள், பாதுகாப்பு கவர், சானிடைசர் கொடுக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து ஒவ்வொரு ஊழியர்களையும் கேரளாவில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல எலைட் குழும நிறுவனம் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஹரிகுமார் தெரிவித்தார்.

விமானத்தை வாடகை எடுத்து 120 ஊழியர்களை கேரளாவுக்கு அழைத்து வந்த ஷார்ஜா தொழிலதிபர்

அத்துடன் மூன்று மாத விடுப்பில் இருக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் எவருக்கும் மேலதிக உதவி வழங்கப்படும் என்று ஹரிகுமார் கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் தணிந்து நிலைமை இயல்பு நிலைக்கு வரும்போது ஊழியர்கள் மீண்டும் ஷார்ஜாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் கூறினார். வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் கோயம்புத்தூரில் உள்ள தனது நிறுவனத்தில் பணியாற்றலாம் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தனது ஊழியர்கள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை சமாளிக்க இது உதவும் என்று நம்புவதாக ஹரிகுமார் கூறினார்.