`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை

 

`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையை தோண்டி வீட்டு வாசலில் வைத்ததால் இதனை சுத்தம் செய்தபோது பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை கொலையில் முடிந்துள்ளது.

`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், 4-வது தெருவைச் சேர்ந்த செல்வம் (53) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், வீட்டின் அருகில் வசித்து வரும் அஞ்சலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தன் மகனும் ரவுடியுமான குறளரசனிடம் (22) அஞ்சலை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குறளரசன், செல்வத்தை கொன்றுவிட்டார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குறளரசன் உட்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து செல்வத்தின் மகன் வேலுமணி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மனுவில், “நான் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறேன். என் அப்பா செல்வம் (53), அம்மா முனியம்மாள். எனக்கு 2 சகோதரிகள். நான் சிறுவயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அக்காள் உமாமகேஸ்வரி, கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் இருதய நோயால் இறந்துவிட்டார். எனக்கு நந்தினி என்பவருடன் கல்யாணமாகி அப்பாவுடன் ஓரே வீட்டில் வசித்து வருகிறோம். என் அப்பா, கோயம்பேட்டில் டிராவல்ஸ் பஸ்ஸில் டிக்கெட் போடும் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லவில்லை.

`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை

இந்நிலையில், நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள பாதாள சாக்கடையை சுமார் ஒரு வாரத்துக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து அதில் உள்ள கழிவுகளை எடுத்து எங்களது உறவினர் சில்வர் ஸ்டார் வீட்டின் முன்பு கொட்டியிருந்தார்கள். இவ்வழியாக வாகனங்கள் சென்று வந்ததால் கழிவுகள் கலைந்து துர்நாற்றம் வீசியதால் என் அப்பா செல்வம் அதை ஒன்று சேர்த்து அதே இடத்தில் குவித்து வைத்தார். அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அஞ்சலையும் அவரின் மகள்கள், மகன் தமிழரசன் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். அப்போது என் அப்பா அஞ்சலையின் மருமகளை அடித்துவிட்டதாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் எங்கள் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதால் போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அதிலிருந்து என் அப்பா மீது விரோதம் கொண்டு அஞ்சலையும் அவரின் மகள்களும் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே இருந்தார்.

என் அப்பாவை கொலை செய்தால்தான் நம்மிடம் இனிமேல் யாரும் பிரச்னை செய்ய மாட்டார்கள் என்று அடிக்கடி திட்டினார்கள். 10.7.2020 இரவு 8 மணியளவில் என் அப்பா எங்கள் வீட்டின் அருகில் என் சித்தப்பா ஜோதிவேல் வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். நானும் என் மனைவியும் எனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் அஞ்சலையின் மகன் குட்டி என்கிற குறளரசனும் எனக்கு தெரிந்த விக்கி என்கிற நொண்டி விக்கியும் மாஸ்க் போட்ட 4 நபர்கள் என் அப்பா அருகில் வந்து நின்றார்கள். என் அப்பா அவர்களைப் பார்த்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது அஞ்சலையும் அவரின் மகள்கள் ஆகியோர் குட்டி என்கிற குறளரசனைப் பார்த்து ஏய் குட்டி அந்தா எழுந்து போறான்டா அவனை வெட்டுங்கடா என்று சொன்னதும் குட்டி என்கிற குறளரசன் நீ என்ன பெரிய ஆளா எங்க குடும்பத்திடம் சண்டை போடுவியான்னு சொல்லி கத்தியை எடுத்து என் அப்பாவின் வலது கால் முட்டியில் ஓங்கி வெட்டினான். அதனால் என் அப்பா நகர முடியாமல் கீழே விழுந்துவிட்டார். அப்போது விக்கியும் மாஸ்க் போட்ட 4 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் என் அப்பா இடது கால் முட்டியிலும் வலது கையிலும் சரமாரியாக வெட்டினார்கள்.

`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை

என் அப்பாவின் தலையில் குட்டி என்கிற குறளரசன் வெட்டினான். அதைப் பார்த்த சித்தப்பாவையும் என் அப்பாவையும் காப்பாற்ற அருகில் ஓடியபோது குட்டி என்கிற குறளரசன் என்னையும் வெட்டினான். அப்போது என் மனைவி என் கையைப் பிடித்து இழுத்ததால் அந்த வெட்டு என் மீது படவில்லை. அரிவாள் வெட்டு என் மீது பட்டிருந்தால் நானும் செத்துப்போயிருப்பேன். உடனே அருகில் உள்ள என் அத்தை ஜெயா மற்றும் குடும்பத்தினர் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அஞ்சலையும் அவரின் மகள்களும் வீட்டைப் பூட்டி விட்டு ஓடிவிட்டார்கள். என் அப்பா ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். நானும் என் சித்தப்பாவும் 108 ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு என் அப்பாவை பரிசோதித்த டாக்டர், என் அப்பா இறந்து விட்டதாகக் கூறினர். என் அப்பாவை கொலை செய்தவர்கள் மீதும் என்னைக் கொலை செய்ய வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பிரச்னை கொலையில் முடிந்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.