தாகமாயிருக்கிறது – சிலுவையில் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள்!

 

தாகமாயிருக்கிறது – சிலுவையில் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள்!

இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுசரிக்கின்றனர். அதாவது இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததை நினைவு கூறும் தினம். இன்றைய நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு பேசிய ஏழு வார்த்தைகளைப் பற்றி நினைவுகூருவோம்!

தாகமாயிருக்கிறது – சிலுவையில் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள்!

1) தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை. (லூக்கா 23:34 )

2ம் வார்த்தை: “இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 23:43)

3) இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, “அம்மா, இதோ! உம் மகன்” என்றார். பின்பு சீடரை நோக்கி, “இதோ! உன் தாய்” என்றார். (யோவான் 19:26-27)

4) ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46)

5) தாகமாயிருக்கிறது (யோவான் 19:28)

6) எல்லாம் நிறைவேறிற்று (யோவான் 19:30)

7) தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக்கா 23:46)

இவற்றில் மூன்று விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

1) லூக்கா 23:34 தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை.

சிலுவையில் அறையப்படும் கைதிகள் தாங்கள் மரண வேதனையுற்று இறக்கும் தருணத்தில் சபிப்பார்களாம். தங்கள் பெற்றோர், தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள், தனக்கு தண்டனை வழங்கியவர்கள், வேடிக்கை பார்க்கும் மக்கள் அனைவரையும் சபிப்பது வழக்கம். இதை கேட்க பிடிக்காத சிலுவை தண்டனை நிறைவேற்றும் வீரர்கள், கைதிகளை சிலுவையில் அறைவதற்கு முன்பு அவர்களின் நாக்குகளை அறுத்துவிடுவது வழக்கம் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் இயேசுவின் நாக்கு வெட்டப்படவில்லை.

ஏன் என்றால் இயேசு தன் பணிக்காலம் முழுவதும் அன்பை மட்டுமே போதித்து வந்தார். உங்களை நீங்களே அன்பு செய்வது போல உங்கள் அருகில் உள்ளவர்களை அன்பு செய்யுங்கள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று எல்லாம் போதித்து வந்தார்.

இப்படி அன்பு பற்றி பேசி வந்த இயேசு, இறக்கும் தருணத்தில் என்ன சாபம் கொடுப்பார் என்று பார்க்க அவரது நாக்கை வெட்டவில்லை என்று சொல்வார்கள். இயேசு சிலுவையில் உயிர் விடுவதற்கு முன்பு பேசிய முதல் வார்த்தை “தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்பதாகும். சாகும் தருணத்திலும் கூட அவர் அன்பைப் பற்றி மட்டுமே போதித்தார்!

என்ன சொல்லி சபிப்பார் என்று பார்த்த நேரத்தில் இவர்களை மன்னியும் என்று தந்தையாம் கடவுளிடம் இவர்களுக்காய் மன்னிப்பு கேட்கிறார். சாபத்தை விடுவார் என்று எல்லோரும் பார்த்த நிலையில் கடவுளின் மன்னிப்பை கேட்கிறார்.

2ம் வார்த்தை: “இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்.”

இயேசுவின் வலது இடது புறத்தில் இரண்டு கள்வர்கள் அறையப்பட்டிருந்தனர். இதில் நல்ல கள்வனைப் பார்த்து இயேசு இதை சொல்கிறார். விவிலியத்தில் மூன்று பேர் இயேசு சிலுவை சுமக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். முதலில் சாத்தான். பாலைவனத்தில் இயேசு நோன்பிருந்து நேரத்தில் சாத்தான் இயேசுவை சோதிக்கும்போது பாடுகள் பட வேண்டாம் என்றது. புனித ராயப்பர் இவ்வாறாக கூறுவார். அவரை அப்பால் போ சாத்தானே என்று இயேசு கடிந்துகொள்வார். மூன்றாவதாக சிலுவை மரத்தில் தொங்கிய நிலையில் கெட்ட கள்வன் உன்னை விடுவித்துக்கொண்டு எங்களையும் விடுவி என்று ஏளனமாக சொல்வான். மேலும் இயேசுவை பார்த்து நீ இறைமகன் தானே என்று கூறி இயேசுவை பழிக்கிறான். அவன் தன் பாவத்துக்கு மனம் வருந்தவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை. சாகும் தருணத்தில் கூட தான் பாவி என்று ஏற்றுக்கொள்ளவே இல்லை.

நல்ல கள்வன் கெட்ட கள்வனைப் பார்த்து ஒன்றும் செய்யாத இந்த மனிதன் தண்டனை பெற்றிருப்பது அநியாயம். நீயும் நானும் தண்டனை பெற்றிருப்பது நியாயமானது என்று கூறி தன் பாவத்துக்கான மனத்துயர் அடைந்தான். நல்ல கள்வன் இயேசுவிடம் நீர் உம் ஆட்சி உரிமையேடு வரும்போது நினைத்துப் பாரும் என்று வேண்டுகிறான். நல்ல கள்வனுக்கு இவர் உன்மையில் கடவுளின் மகன், மோட்சத்துக்கு செல்வார், இறையாட்சிக்குள் செல்லும் போது தன்னை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஜெபித்தான்.

இந்த உலகத்தின் வாழ்வை அவன் மறந்துவிட்டு, மோட்ச வாழ்வு தேவை என்று கருதி மோட்ச வாழ்வை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். அதனால் இயேசு அவனைப் பார்த்து, “இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்” என்று வாக்குறுதி கொடுக்கிறார்.

தாகமாயிருக்கிறது – சிலுவையில் இயேசு பேசிய கடைசி வார்த்தைகள்!

5ம் வார்த்தை தாகமாயிருக்கிறேன் (யோவான் 19:28)

இயேசு வாழ்வளிக்கும் தண்ணீர் நான் என்றார். நான் கொடுக்கும் தண்ணீரை குடிக்கும் எவனும் தாகம் அடைய மாட்டான் என்று இயேசு சொல்கிறார். நானே தாகம் தீர்க்கும் தண்ணீராய் இருக்கிறேன் என்று சொன்ன இயேசு ஏன் தாகமாய் இருக்கிறேன் என்றார்?

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயல் மக்கள் பாறை வழியாக வந்த தண்ணீரை குடித்தார்கள். மீண்டும் தாகம் எடுத்தது. மீண்டும் மிண்டுமாகத் தாகம் எடுக்கச் செய்தது. அந்த தண்ணீர் முழுமையாக தாகத்தைத் தணிக்கவில்லை. சமாரிய பெண் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீர் தாகத்தை தணிக்கவில்லை. நாம் குடிக்கும் தண்ணீர் ஒரு போதும் நம் தாகத்தைத் தணிக்காது. குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சாகும் வரையிலும் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தாகம் எடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

இயேசுவின் தாகம் என்ன… அது நாம் குடிக்கும் தண்ணீர் இல்லை. பாலைவனத்தில் ஆண்டவர் கொடுத்த தண்ணீர் இல்லை. இயேசுவின் தாகம் என்பது சாகின்ற வரையிலும் நான் உன் மீது அன்புடன் இருக்கிறேன் என்ற தாகம். இந்த தாகம் ஒரு போதும் தணியாது. எதைக் கொடுத்தாலும் அதை ஈடு செய்ய முடியாது. கடைசி மூச்சு விடும் வரையிலும் மனித சமூகத்தின் மீது, உங்கள் மீது தாகமாய் இருக்கிறேன் என்கிறார். இயேசுவின் உடல் தாகத்தை அல்ல, உள்ள தாகத்தை வெளிப்படுத்துகிறார்.

உன் மீது தாகமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்கிறார். இயேசு எதைப் பற்றி தாகமாய் இருக்கிறேன் என்று கூறுகிறார் என்பதை உணராத படை வீரன், கசப்பான புளிப்பான திராட்சை ரசத்தை கொடுத்தான்.

இன்று இயேசு நம்மைப் பார்த்து உன் மீது தாகமாய் இருக்கிறேன், உன் குடும்பத்தின் மீது, உன் குழந்தை மீது தாகமாய் இருக்கிறேன்… உன் அன்புக்காக, நல் வாழ்வுக்காக, மீட்புக்காக தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் இயேசுவுக்கு எதை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? எப்படி அவர் தாகத்தை தணிக்க முடியும்? உன்னை அன்பு செய்கிறேன், ஒரு போதும் தணியாது, அந்த அன்பின் தாகம் தீறாது என்று என்று கூறும் இயேசுவுக்கு எதை கொடுக்கப் போகிறோம்? பாவம் என்ற புளிப்புள்ள திராட்சை ரசத்தை கொடுக்கப் போகிறோமா? சிந்திப்போம்!