`இ-பாஸ் பெற தனி வாட்ஸ் அப் குரூப்; லட்சங்களை சுருட்டிய கும்பல்!’- உடந்தையான அதிகாரிகள் சிக்குவார்களா?

 

`இ-பாஸ் பெற தனி வாட்ஸ் அப் குரூப்; லட்சங்களை சுருட்டிய கும்பல்!’- உடந்தையான அதிகாரிகள் சிக்குவார்களா?

இ-பாஸ் வேண்டுமானால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தனி வாட்ஸ் அப் குரூப் ஒன்றை அமைத்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ள கும்பல் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் அவர்களுக்கு இ-பாஸ் தடையாக இருந்தது. பலர் ஒரே நேரத்தில் இ-பாஸ் கேட்டதால் பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கொரோனாவுக்கு பயந்த பொதுமக்கள், எப்படியாது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் போலியாக இ-பாஸ் தயாரித்து விண்ணப்பித்தவர்களுக்கு கொடுத்து வந்தனர். இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளே உடந்தையாக இருந்ததுதான் வேதனை.

இந்த சூழ்நிலையில், இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் செல்ல இ பாஸ் பெற்றுத் தரப்படும் என்று வேலூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் குழு உருவாக்கியுள்ளது ஒரு கும்பல். சென்னைக்கு செல்ல 1500 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது இந்த கும்பல். இது குறித்து ஆதாரங்களுடன் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கும்பலை பிடிக்க ஒரு டீம்மை அமைத்து குற்றவாளிகளைப் பிடித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 350 பேருக்கு மேல் இ பாஸ் வாங்கிக்கொடுத்துள்ளது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளைக் இந்த கும்பல் கையில் வைத்துக்கொண்டு பாஸ் வாங்கிக்கொடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல 1,200 ரூபாய் என்று விற்பனை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். இந்த கும்பலுடன் எந்த அதிகாரிகள் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் போலி இ-பாஸ் கொடுத்ததாக திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின், கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் கைது செய்துள்ள தனிப்படையினர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.