சட்டவிரோத மண் கடத்தல்! மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி

 

சட்டவிரோத மண் கடத்தல்! மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி

கரூரில் குடிமராமத்து திட்டம் என்ற பெயரில் ஊர் பொது குளத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து எம்எல்ஏ செந்தில் பாலாஜி பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டிக்கு அருகில் உள்ள புதுப்பாளையத்தில் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுக் குளம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த சில தினங்களாக தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம் தூர் வார டெண்டர் எடுத்தவர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக அந்த குளத்தில் இருந்து பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான லோடு மண்ணை அள்ளி விற்பனை செய்வதாக செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து இன்று செந்தில் பாலாஜி புதுப்பாளையம் குளத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது குளத்துக்குள் இரண்டு லாரிகள் மற்றும் 2பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி குளத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டிருந்தனர்.

சட்டவிரோத மண் கடத்தல்! மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி

இதையடுத்து செந்தில்பாலாஜி அந்தப் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம் தூர் வருவதாக கூறி நூற்றுக்கணக்கான லோடு மண் கடத்தப்படுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சட்டவிரோத மண் கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் கிராம மக்கள் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தனர்.