தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி வெங்கடம்மா காணாமல் போனதாக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி அவரது உடல் அனுகுஷ்புர் கிராமம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வெங்கடம்மாவை ஒரு நபர் ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றதையும் அங்கு அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றதையும் கண்டுபிடித்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் சிசிடிவில் இருந்த அதே நபர் சம்பந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அடுத்தடுத்து கொலைகளை செய்யும் அந்த நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், பெண்களை கொலை செய்த அந்த நபரின் பெயர் ராமுலு என்றும் அவர் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட தொடர்ந்து 16 கொலைகளில் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆயுள் தண்டனை கைதியான ராமுலு, 2011 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றதும் 2013 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு 2018 இல் விடுதலையானதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத்தில் பதுங்கியிருந்த ராமுலுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு பெற்றோர் 21 வயதில் திருமணம் செய்து வைத்ததாகவும் வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்த தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் அதனால் பெண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பில் தொடர் கொலையில் ஈடுபட்டு வருவதாகவும் ராமுலு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது.
மனைவி மீதான வெறுப்பில், இதுவரை ராமுலு 21 பெண்களை கொலை செய்திருப்பதாகவும் அவரது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை வெளியே விட்டால் மற்ற பெண்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த போலீசார், ராமுலுவை வெளியே விடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.