அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்கும் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

 

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்கும் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்கும் துணைவேந்தர் சூரப்பாவின் தன்னிசையான போக்கை தமிழக அரசு தடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் கோரி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தனது அதிகார எல்லையைத் தாண்டி மத்திய அரசுக்கு நேரிடையாகக் கடிதமெழுதி அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அபகரிக்க முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிற அளவுக்கு அதிகாரம் தந்தது யார்? இதுவெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? தமிழக அரசு இதுகுறித்து எவ்வித எதிர்வினையுமாற்றாது ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? என நீளும் எவ்விதக் கேள்விகளுக்கும் விடையில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்கும் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் தந்தாலும் நிதிச்சுமையை மாநில அரசு அரசுதான் கவனித்துக்கொள்ள வேண்டும் எனக்கூறும் மத்திய அரசு, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இதுவரை எவ்வித உறுதிப்பாடும் தராத நிலையில் துணைவேந்தர் சூரப்பா தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து மத்திய அரசிற்குக் கடிதமெழுதியிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய அதிகார அத்துமீறலாகும். மாநில அரசின் நிதிப்பங்களிப்பு இல்லாமலேயே ஐந்தாண்டுகளுக்கு 1,500 கோடிவரை நிதித் திரட்டிக்கொள்ள முடியும் எனக்கூறி, மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்த துணைவேந்தர் துணைபோவது பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைத்து தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும். மாநிலத்தன்னாட்சியைத் தனது உயிலெனக் கொண்டிருந்த அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தையே மாநிலக்கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கையடக்கத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சியை தமிழக அரசு இன்னும் வேடிக்கைப்பார்ப்பது வெட்கக்கேடானது.

தமிழகத்தின் தனித்துவமிக்க உயர்கல்வி அடையாளங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு அங்கீகாரத்தின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் அது தமிழ் இளையோர்க்கான வாய்ப்பை மொத்தமாகப் பறித்து வடநாட்டவர்களின் வருகைக்கு வாசல் திறந்துவிடும் அபாயமுள்ளது. ஆகவே, பல்கலைக்கழகத் துணைவேந்தரது நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து, அது அரசின் நிலைப்பாடு இல்லை என்பதைத் தெளிவுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திட வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.