பாஜகவை பகைத்துக்கொள்ள திமுக விரும்பவில்லை- சீமான் அதிரடி

 

பாஜகவை பகைத்துக்கொள்ள திமுக விரும்பவில்லை- சீமான் அதிரடி

ஒன்றியம் எனும் வார்த்தையை கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மமதா பானர்ஜியைப் போல பாஜக அரசை எதிர்ப்பதற்கு திமுக முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாஜகவை பகைத்துக்கொள்ள திமுக விரும்பவில்லை- சீமான் அதிரடி

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அ.தி.மு.க.வின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து அதன் விளைவாக ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு பா.ஜ.க. இட்ட பாதையில் செல்வதும், அவர்களை மென்மையானப்போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத்தாண்டி தி.மு.க. அரசு, பா.ஜ.க.வை எதிர்த்து வீரியமாய்ச் செய் திட்ட அரசியலென்ன? 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கெதிராக நாடெங்கிலும் எழுந்த எதிர்க்கட்சிகளின் அணிச்சேர்க்கையை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முந்திக்கொண்டு அறிவித்து முறியடித்த ஸ்டாலின், தற்போது அதன் நீட்சியாகவே பா.ஜ.க.வை பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மாநில அதிகார வரம்புக்குட்பட்டுச் சிறைத்துறை நிர்வாகமும், சிறைவாசிகளுக்கு விடுப்பு வழங்கக்கூடிய வாய்ப்பும் இருக்கும்போது அவ்வுரிமையைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் நீண்ட சிறைவிடுப்பின் கீழ் விடுவித்து மாநிலத்தன்னுரிமையை நிலைநாட்டலாமே? அதில் என்ன தயக்கம் ஸ்டாலினுக்கு? காங்கிரசு கோபித்துக் கொள்ளும் என்றா? பா.ஜ.க.வைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றா? அதனால்தான், முருகனுக்கும், அக்கா நளினிக்கும் சிறை விடுப்பை மறுத்தார்களா?

முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கெதிராகத் தீர்மானமியற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று தமிழகத்திற்கான விலக்கைச் சாத்தியப்படுத்துவோம் எனக் கூறிய தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி என்னானது? தீர்மானமே இயற்றப்படவில்லையே, அப்புறம் எங்கே ஒப்புதல் தரக்கூறி குடியரசுத்தலைவருக்கு அழுத்தம் கொடுப்பது? எத்தனை எத்தனை சமரசங்கள்? ஏமாற்று வாக்குறுதிகள்? கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கைத் திரும்பப்பெற்ற தி.மு.க. அரசு, கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. அரசு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறவில்லையே அது ஏன்? என்ன காரணம்?

பாஜகவை பகைத்துக்கொள்ள திமுக விரும்பவில்லை- சீமான் அதிரடி

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் ஜவா ஹிருல்லாவே காவல்துறையினரிடம் புகாரளித்தும், அது இரு சமூகங்களிடையே பிளவை உண்டாக்க முனைகிறது என எச்சரித்தும் அந்தப்புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யாதது ஏன்? ஜார்ஜ் பொன்னையாவைக் கைது செய்யக் காட்டிய முனைப்பில் ஒரு விழுக்காடுகூட எச்.ராஜா, விவாகரத்தில் காட்டாதது தான் தி.மு.க.வின் மதவாத எதிர்ப்பு அரசியலா? இவ்வாறாக, ஏராளமான வினாக்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இனிமேலாவது, ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பா,ஜ.க. அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும், மோடி அரசின் நாசகாரத் திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டைப் பேணிக்காத்து மாநிலத்தின் மண்ணுரிமையையும், தன்னுரிமையையும் நிலைநிறுத்த வேண்டும் என மாநிலத்தை ஆளும் தி.மு.க. அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.