“சீமான் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – கே.பி.முனுசாமி எச்சரிக்கை

 

“சீமான் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – கே.பி.முனுசாமி எச்சரிக்கை

திருவள்ளூர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கே.பி.முனுசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தை இருண்ட மாநிலமாக எம்.ஜி.ஆர் மாற்றிவிட்டார் என சீமான் பேசுவதாகவும், கோடிக்கணக்கான மக்கள் நேசிக்கும் தலைவரை பற்றி தான்தோன்றித் தனமாக பேச வேண்டாம் என்றும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பிரபாகரனை வைத்து, தமிழகத்தில் அரசியல் நடத்தும் சீமானுக்கு, ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த எம்.ஜி.ஆர் குறித்த வரலாறு தெரியவில்லை. பிரபாகரனுக்கு இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டபோது, அவருக்கு தமிழகத்தில் தஞ்சம் கொடுத்து, தற்காப்பு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததுடன், நிதி உதவியும் அளித்தவர் எம்ஜிஆர் என கே.பி. முனுசாமி குறிப்பிட்டார்.

“சீமான் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – கே.பி.முனுசாமி எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்தான் , ஏழை மக்கள் கல்வி கற்க உதவியது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்கி சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். கிராம மக்களுக்கு நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் கிராமப்புற மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியவர். இப்படி பல எண்ணற்ற திட்டங்களை வழங்கிய மாபெரும் தலைவர் குறித்து தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.

தொடந்து பேசுகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுகவின் ஊழலை கண்டுபிடித்த உடன், அந்த கட்சி காங்கிரசுக்கு அடிமையானது. ஆனால் எந்த நிலையிலும் அதிமுக தனது தனித்தன்மையை இழக்காது. கூட்டணி தர்மத்தை மதிக்கும் அதேநேரத்தில், கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களுக்கு அதிமுகவினர் அடிபணிந்து நடக்க மாட்டோம் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.