சளிக்கு ஆவி பிடித்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி!

 

சளிக்கு ஆவி பிடித்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி!

கன்னியாகுமரி

குமரி அருகே ஆஸ்துமா பிரச்சினைக்காக ஆவி பிடித்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அடுத்துள்ள குமாரப் பெருமாள்விளை பகுதியில் வசித்து வருபவர் சாம்பெனடிக். கூலி தொழிலாளி. இவரது 14 வயது மகள் அக்சயா ஜென்சி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அக்சயா ஜென்சிக்கு, ஆஸ்துமா நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் அடிக்கடி ஆவி பிடித்து வந்துள்ளார்.

சளிக்கு ஆவி பிடித்த பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி!

இந்த நிலையில், நேற்று காலை ஆஸ்துமா பிரச்சினைக்காக அவரது பெற்றோர் அக்சயாவை ஆவி பிடிக்க செய்து உள்ளனர். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அக்சயா ஜென்சியை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த, பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அக்சயா ஜென்சி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாம்பெனடிக் அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.