இறுதித் தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்

 

இறுதித் தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்

கல்லூரியில் இறுதித் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பட்டம் பெற முடியாது, தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் எப்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக இறுதியாண்டு தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இறுதித் தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்
இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், செப்டம்பரில் தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையின்போது, பல்கலைக் கழக மானியக் குழு தன் தரப்பு வாதத்தை வைத்தது. அப்போது, “பல்கலைக் கழக மானியக் குழுவின் உத்தரவுகளை மீறி கல்லூரித் தேர்வுகளை மாநில அரசுகள் ரத்து செய்ய முடியாது. மகாராஷ்டிரா, டெல்லி மாநில அரசுகள் அறிவிப்பு விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது. இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.

இறுதித் தேர்வு எழுதாமல் பட்டம் பெற முடியாது! – உச்ச நீதிமன்றத்தில் யு.ஜி.சி வாதம்
செப்டம்பர் மாதம் இறுதித் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். தேர்வுகளை ரத்து செய்யப் போவதாக மாநில அரசுகள் கூறுவது சரியானது இல்லை. தேர்வு எழுதாமல் யாருக்கும் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்பதுதான் சட்டமாக உள்ளது. எனவே, தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியது.
இதற்கு மாணவர்கள், மற்றும் மாநிலங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை வருகிற 14ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.