SC, ST மக்களுக்கு பாதிப்பில்லை: மதுரையில் மோடி பேச்சு

 

SC, ST மக்களுக்கு பாதிப்பில்லை: மதுரையில் மோடி பேச்சு

10% இட ஒதுக்கீட்டால் SC, ST மக்களுக்கு பாதிப்பில்லை என பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பேசினார்.

மதுரை: 10% இட ஒதுக்கீட்டால் SC, ST மக்களுக்கு பாதிப்பில்லை என பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பேசினார்.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும், 12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 1000 ஆண்டுகளாக தமிழ் சங்கம் அமைந்துள்ள மதுரையில் இருப்பது மகிழ்ச்சி. இங்கு ஜெயலலிதாவுக்கு எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. அதற்கு எனது நல்வாழ்த்துகள். 3 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்பதே நோக்கம்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மக்களின் திட்டமாக மாறியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏராளமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.கிராமப்புற சுகாதாரம் 2014-ல் 38%-ஆக இருந்தது. தற்போது 98%-ஆக அதிகரித்துள்ளது.

ரயில்வே வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலை இரு மடங்காக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும் இணைக்கும் திட்டம் உள்ளது. மதுரை மக்களின் நீண்ட கால கோரிக்கையான தேஜஸ் ரயில் மதுரை – சென்னை இடையே இயக்கப்படும். தமிழகம் தொழில் முறையில் நன்கு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக துறைமுக மேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஏழை மக்களை கருத்தில் கொள்ளாத எதுவும் நாட்டுக்கு பலனளிக்காது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் நீதியால் தண்டிக்கப்படுவார்கள். 10% இடஒதுக்கீட்டை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கொண்டு வந்ததால் SC, ST மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிலர் இதை அரசியலுக்காக எதிர்க்கின்றனர் என்று பேசினார்.