கொரோனா விளைவு: ஹஜ் புனித யாத்திரையில் இந்தாண்டு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை

 

கொரோனா விளைவு: ஹஜ் புனித யாத்திரையில் இந்தாண்டு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை

மக்கா: ஹஜ் புனித யாத்திரையில் இந்தாண்டு வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை 1307-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரை குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக சவுதி  அரேபியாவை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே இந்தாண்டு ஹஜ் யாத்திரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹஜ் அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த அறிவிப்பானது நவீன காலத்தில் முதன்முறையாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மக்காவிற்கு வருடாந்திர யாத்திரை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்வது முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எந்தவொரு நிபந்தனையும் இன்றி விண்ணப்பதாரர்களுக்கு டெபாசிட் செய்த முழுத் தொகையையும் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.