சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் மனு; சிபிஐ பதில் தர உத்தரவு

 

சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் மனு; சிபிஐ பதில் தர உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் மனு; சிபிஐ பதில் தர உத்தரவு

அதன் பின்னர் இந்த வழக்கை சிபிஐ போலீசார் கையில் எடுத்த நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. அதுமட்டுமில்லாமல், கைதான உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே காவலர் முருகன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர் முருகன் ஜாமீன் கோரி மனு அளித்திருப்பது தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.