சாத்தான்குள விவகாரம்; 3 போலீசாருக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

 

சாத்தான்குள விவகாரம்; 3 போலீசாருக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் 5 பேர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிந்து, அவர்களை அதிரடியாக கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல்நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவகாரம்; 3 போலீசாருக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்ற சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்தனர். தொடர்ந்து, முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 3 நாட்கள் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். அதே போல, மேலும் 5 காவலர்களிடமும் விசாரணை செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது.

இன்று காலை 2ம் கட்டமாக கைது செய்யப்பட்ட சாமதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சிபிஐ மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டதன் பேரில், இன்று மாலை 3 மணிக்கு 3 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, காவலர்கள் 3 பேரும் சிபிஐ விசாரணைக்கு செல்ல சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் 3 பேரையும் 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.