“சசிகலா உடல்நிலை சீராக உள்ளது”- விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

 

“சசிகலா உடல்நிலை சீராக உள்ளது”- விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கடந்த 21ஆம் தேதி விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பதும் உறுதியானது.

“சசிகலா உடல்நிலை சீராக உள்ளது”- விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

இதனை அடுத்து, தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமானதால், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, கடந்த 5 நாட்களாக அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி, மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் குறைந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சசிகலா உணவு எடுத்து கொள்வதாக தெரிவித்து உள்ள மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.