தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பாக பேசப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுதலையான சசிகலா தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து சசிகலா அதிமுக இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணினர். விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் என்று அறிவித்திருந்த சசிகலா, நேற்று அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சசிகலாவின் அறிவிப்பை கே.பி,.முனுசாமி, பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சசிகலா அண்ணன் திவாகரன் அளித்த பேட்டியில், சசிகலா ஒரு வீராங்கனை. அவர் சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து விலகியுள்ளார். அவரது முதுகில் குத்த துரோகிகள் கூட்டம் உள்ளது என்பதை அறிந்து தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நான் சசிகலாவின் முடிவை வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. அவருக்கான துரோகிகள் குடும்பத்தில் தான் உள்ளனர். டிடிவி தினகரன் உள்ளிட்டோரால் தான் சசிகலா இந்த முடிவை அறிவித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “டிடிவி தினகரன் தான் முதல்வர் வேட்பாளர், அமமுக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என்று தினகரன் கூறியது எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சி நடந்த போது, தினகரனின் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சு அதிமுக பேச்சுவார்த்தையில் விரிசலை கொண்டுவந்துள்ளது. இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா விருப்பப்படி அதிமுக வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டும்; அதுதான் என் விருப்பமும் கூட. சசிகலாவுக்கு அரசியல் , பதவியை விட உடல்நலனே முக்கியம்” என்றார் .