சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் நுரையீரலில் தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதனையடுத்து சசிகலா கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா உடல் நன்றாக ஒத்துழைக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. கொரோனாவுக்கான அறிகுறிகள் குறைந்துள்ளன. நாடித்துடிப்பு 77 ஆகவும், இரத்த அழுத்தம் 149 ஆகவும் உள்ளது. ஆக்ஸிஜன் அளவு 97 %ஆக இருப்பதால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஐசியூவில் சிகிச்சை பெறும் சசிகலா உணவு உட்கொள்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.