சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கம்!

 

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரு சிறையில் இருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியான நிலையில் அவர் வரும் ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கம்!

இந்நிலையில் சசிகலாவின் கோடிக்கணக்கான மதிப்பிலான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. அதன்படி சென்னை போயஸ்கார்டன், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு சசிகலா, உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது. ஏற்கனவே ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்ட நிலையில் தற்போதும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.