“கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் நடிப்பு” – தமிழக அரசு குறித்து சஞ்சய் தத் விமர்சனம்

 

“கொரோனாவை கட்டுப்படுத்தியது போல் நடிப்பு” – தமிழக அரசு குறித்து சஞ்சய் தத் விமர்சனம்

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் த்த் தலைமை வகித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், “மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. தலித் பெண்கள் மீதான வன்முறையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பிஜேபி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இதில் அனைத்து பிஜேபி தலைவர்களின் தலையீடுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெற்று கொண்டிருக்கிறது. பெண்களையும் குழந்தைகளையும் பிஜேபி தலைவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

Withdrawal of SPG cover to Gandhis, a conspiracy, alleges AICC secretary -  The Hindu

மத்திய அரசு கொரானாவின் தீவிரத்தன்மையை உணரவில்லை.கொரானா குறித்து மார்ச் மாத ஆரம்பத்திலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சொல்லி அறிவுறுத்தினார். ஆனால் பாஜக அரசும் பிரதமரும் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை இதற்கு மாறாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்பதிலே முக்கியத்துவம் காட்டினார்கள். தமிழக அரசு கொரானாவை கட்டுப்படுத்தியது போன்று போலியாக நடித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரானாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டன. கொரானா காலத்தில் கூட தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை போல காய்கறி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை 100 ரூபாய் 200 ரூபாய் என அதிகரித்துள்ளது. இதனால் சாமானியர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவும் அதிமுகவும் தேர்தலை முன்னிறுத்தி பல வாக்குறுதிகளை கொடுத்தாலும் அதனை செயல்படுத்த மாட்டார்கள். தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் தமிழுக்கும் எதிரான ஒரே கட்சி என்றால் அது பாஜகதான்” எனக் கூறினார்.