சமயபுரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

 

சமயபுரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், புகழ்பெற்ற சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தொடர்ந்து, நேற்றிரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

பின்னர், அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபம் வந்தடைந்தார். இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அம்மனை தரிசித்து சென்றனர்.

சமயபுரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் நாள்தோறும் காலையில் கேடயத்திலும், மாலையில் சிம்மம், பூதவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20 ஆம் தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

தொடர்ந்து, வரும் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும், 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து தங்க கமல வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.