‘மனம் திறந்து பேசுங்கள்’ அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறை காவலர் உள்ளிட்டோருக்கு சுப உதயகுமார் கோரிக்கை

 

‘மனம் திறந்து பேசுங்கள்’ அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறை காவலர் உள்ளிட்டோருக்கு சுப உதயகுமார் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் சாத்தான் குளம் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு நடந்த இரட்டை மரணத்திற்கு நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்துவருகின்றன. திரைத்துறையில் பல கலைஞர்களும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகின்றனர்.

பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப உதயகுமாரன் சாத்தன் குளம் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், சிறையில் அடைத்த காவலர் உள்ளிட்டோருக்கு மனம் திறந்து பேசுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அக்கோரிக்கையில்,

“சாத்தான்குளம் அரசு மருத்துவரான டாக்டர் வெண்ணிலா அவர்களே,

சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் ஐயா சரவணன் அவர்களே,

கோவில்பட்டி கிளைச் சிறையில் பொறுப்பிலிருந்த காவலர் திரு. அழகர்சாமி அவர்களே,

கிளைச் சிறையின் சப்-ஜெயிலரான திரு. சங்கர் அவர்களே,

கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் வெங்கடேஷ் அவர்களே,

‘மனம் திறந்து பேசுங்கள்’ அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறை காவலர் உள்ளிட்டோருக்கு சுப உதயகுமார் கோரிக்கை

சாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று முகநூல் அல்லது வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக தமிழ் மக்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். மக்கள்தான் இந்நாட்டின் மன்னர்கள்.

பொய்யும் புரட்டும் மலிந்துகிடக்கும், லஞ்சமும் ஊழலும் நிறைந்துகிடக்கும் அரசச் சடங்குகள் அருகிப் போகட்டும். அவையெல்லாம் முதல்வர் வாசித்த அறிக்கை போலத்தான் இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

உயிர்களைக் காக்கும் அறிவும், திறனும் கொண்ட அன்பிற்குரிய டாக்டர் வெண்ணிலா அவர்களே, நீங்கள் ஒரு பெண், ஓர் அம்மாவாகவும் இருக்கலாம். நீங்கள் முதலில் பேசுங்கள்! உண்மையைப் பேசுங்கள்!! உடனடியாகப் பேசுங்கள்!!!

மதிப்பிற்குரிய நீதித்துறை நடுவர் ஐயா சரவணன் அவர்களே, நீங்கள் பேசுங்கள்! சாத்தான்குளம் காவலர்கள் பரிந்துரையின் பேரில் இதுவரை எத்தனை பேரை நீங்கள் சிறையில் அடைத்திருக்கிறீர்கள்? அவர்கள் அனைவரும் செய்தக் குற்றங்கள் என்னென்ன? அந்தக் கைதிகளை நீங்கள் எப்படியெல்லாம் விசாரித்துவிட்டு சிறைக்கு அனுப்புனீர்கள்? நீதி, நியாயம் காக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் உங்கள் மனசாட்சிபடி மக்களிடம் பேசுங்கள்.

மரியாதைக்குரிய மருத்துவர் வெங்கடேஷ் அவர்களே, கோவில்பட்டிச் சிறையில் தந்தை-மகன் இருவரையும் நீங்கள் பரிசோதிக்கும்போது என்ன நடந்தது? அவர்கள் இருவரும் உடம்பில் எங்கெங்கே வலிக்கிறது என்று சொன்னார்கள்? அவர்கள் இருவரும் உங்களிடம் அழுதார்களா? அவர்களின் காயங்களைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னென்னக் கேள்விகள் கேட்டீர்கள்? உங்களுக்குள் நடந்த உரையாடல் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள், டாக்டர் வெங்கடேஷ். நீங்களும் மக்களைப் பெற்ற ஒரு மகராசனாகத்தான் இருக்க வேண்டும். ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய ஒரு மருத்துவராகத்தான் இருக்க வேண்டும். தயவுசெய்து பேசுங்கள்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் வேலைபார்க்கும் ஐயா அழகர்சாமி அவர்களே, ஐயா சங்கர் அவர்களே, நீங்கள் பேசுங்கள். சிறையில் என்ன நடந்தது? சிறைக்கைதிகளை உங்கள் கண்களைப் போலப் பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் என்ன செய்தீர்கள்?

பேசுங்கள்! அனைவரும் பேசுங்கள்!! தயவுசெய்து பேசுங்கள். ஐயா ஜெயராஜ் அவர்களுடனும், திருமணம்கூட ஆகாத அந்தத் தம்பி பென்னிக்ஸ் உடனும் பேசுகிறீர்களா? அந்த இருவரின் முகங்களை உங்கள் மனக்கண்ணில் மீண்டும் ஒருமுறை நிறுத்தி உண்மையைப் பேசுங்கள்.

எங்கள் கன்னியாகுமரி மாவட்டத் தமிழர்கள் பலர் மத்தியில் ஓர் ஆழமான நம்பிக்கை உண்டு. அது திருமணம் ஆகாமல் கன்னி கழியாமல் மரித்த ஆன்மாக்களுக்கு அதிதீவிர சக்தி உண்டென்பது. அப்படி இளமையில் இறந்தவர்களுக்கென வீடுகளில் விசேடப் பூசைகள் செய்யப்படுவதுண்டு. பென்னிக்ஸ் ஒரு சக்தி வாய்ந்த கன்னி. அவன் அனைவரையும் பேசவைப்பான்.

‘மனம் திறந்து பேசுங்கள்’ அரசு மருத்துவர், நீதித்துறை நடுவர், சிறை காவலர் உள்ளிட்டோருக்கு சுப உதயகுமார் கோரிக்கை

எனவே, டாக்டர் வெண்ணிலா அவர்களே,

நீதிபதி ஐயா சரவணன் அவர்களே,

காவலர் திரு. அழகர்சாமி அவர்களே,

ஜெயிலர் திரு. சங்கர் அவர்களே,

டாக்டர் வெங்கடேஷ் அவர்களே,

பேசுங்கள். மக்களிடம் மனம்விட்டுப் பேசவில்லையென்றால், உங்களோடு நீங்களே தனியாகப் பேசிக்கொள்ள நேரிடும். எனவே பேசுங்கள்!

ஒரு மருத்துவரை, ஒரு நீதிபதியை, ஒரு சிறை அதிகாரியை நம்பமுடியாமல் நீங்களும், நாங்களும், நம்மனைவரின் குழந்தைகளும், வழித்தோன்றல்களும் எப்படி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.