பெண் பார்ப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி; போலி ராணுவ மேஜர் கைது

 

பெண் பார்ப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி; போலி ராணுவ மேஜர் கைது

தெலங்கானா

தெலங்கானாவில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதாக கூறி, பலரிடம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்த போலி ராணுவ அதிகாரியை போலீசார் கைதுசெய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனு சௌகான் (42) என்கிற சீனு நாயக். இவர்
9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பின்னர் தொலைதூரக்கல்வி மூலம் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு அமிர்தாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள சைனிக்புரிக்கு இடம்பெயர்ந்த சீனு சௌகான், வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட சீனு சௌகான், இந்திய ராணுவத்தில் மேஜராக வேலை பார்ப்பது போன்று, போலி அடையாள அட்டை, மெடல்கள் மற்றும் ராணுவ சீருடை ஆகியவற்றை வாங்கி அணிந்து, புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பெண் பார்ப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி; போலி ராணுவ மேஜர் கைது

தொடர்ந்து, திருமண தகவல் மையங்களை அணுகி, தனக்கு திருமணத்திற்காக பெண் தேவை என்று கூறி பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினார். இதில் சீனுசௌகானின் பேச்சை நம்பி பல பெண்களின் பெற்றோர், அவருக்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை முன்பணமாக கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மோசடி குறித்து தகவலறிந்த ஐதராபாத் வடக்கு பகுதி டாஸ்க் போர்ஸ் போலீஸார், நேற்று சீனு செளகானை அதிரடியாக கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சீனுசௌகான் ராணுவ மேஜர் என்று கூறி, பல பெண்களின் பெற்றோர்களை ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததும், அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தனக்கு வேலை கிடைத்து ராணுவத்தில் மேஜராக பணிபுரிவதாக மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

பெண் பார்ப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி; போலி ராணுவ மேஜர் கைது

இதனையடுத்து, சீனு சௌகானிடம் இருந்து ஒரு போலி கைத்துப்பாக்கி, போலி அடையாள அட்டை, விலையுயர்ந்த கார்கள் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.