காங்கேயம் அருகே ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.20 கோடி கோவில் நிலங்கள் மீட்பு!

 

காங்கேயம் அருகே ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.20 கோடி கோவில் நிலங்கள் மீட்பு!

திருப்பூர்

காங்கேயம் அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட சிவியார்பாளையம் கிராமத்தில், சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பரமசிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, 200 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியை சேர்ந்த குறுநில மன்னரால் 69.81 ஏக்கர் புன்செய் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த 19 நபர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்ததாக கூறப்படுகிறது.

காங்கேயம் அருகே ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.20 கோடி கோவில் நிலங்கள் மீட்பு!

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்த நீதிபதி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். எனினும், ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை காலி செய்ய மறுத்து வந்தனர்.

இதனை அடுத்து, நேற்று இந்து சமய அறநிலைய திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் தலைமையில், உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் சென்னிமலை சாலை பகுதியில் உள்ள சாவடி முதல் நால்ரோடு வரை இருந்த 69.81 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, மீட்டனர். இந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.