பூட்டப்பட்ட வீட்டில் 10 டன் குட்கா… ரூ.1.5 கோடி மதிப்பு… கடைகளுக்கு சப்ளை!- அதிர்ந்த போலீஸ்

 

பூட்டப்பட்ட வீட்டில் 10 டன் குட்கா… ரூ.1.5 கோடி மதிப்பு… கடைகளுக்கு சப்ளை!- அதிர்ந்த போலீஸ்

கடலூரில் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 டன் எடை கொண்ட இந்த புகையிலையின் மதிப்பு ரூ.1.5 கோடி என தெரியவந்துள்ளது.

கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் ஒரு வீடு நீண்ட நாட்களாக பூட்டி கிடந்துள்ளது. இந்த வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, டிஎஸ்பி சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர். பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்த காவல்துறையினர் உள்ளே சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கிருந்த அறைகளிலும் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தது. இதனை திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். 10 டன் எடையுள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த வீட்டில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. புகையிலையை வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த பாரதி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.